உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்.... காண்டான ஜெயக்குமார் விமர்சனம்!
துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார். இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; திமுகவினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் திமுகவினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 8.10.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அதிமுக மனித சங்கிலி போரட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வான் சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் சோற்றில் முழு பூசணிக்காயை வைத்து மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. வான் சாகச நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வசதியோ, குடிநீர் வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வசதிகளோ எதுவுமே இல்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் குப்பைக்கு 79 லட்சம் ரூபாய் வசூலிக்கிறது. ஆனால் வான் சாகச நிகழ்ச்சியில் குடிநீருக்காக செலவு செய்யாதது ஏன்? பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட கார் பந்தயத்தை நடத்துவதற்கு முன்பு துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் உட்பட 10 அரசு துறைகள் பலமுறை கார் பந்தயம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தது. ஆனால் வான் சாகச நிகழ்ச்சிக்கு முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒரு கூட்டத்தையாவது அரசு நடத்தியதா?
இதை நீதிமன்றம் சும்மா விடக்கூடாது. நீதிமன்றம் இது குறித்து தாமாகவே முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் மரணித்தவரின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். அரசு முன்னேற்பாடுகளிலும் முன்னெச்சரிக்கைகளையும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கையாலாகாத, கையால முடியாத அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. அரசுக்கு என்று ஒரு வரன்முறை உள்ளது. துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார். இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா?” என விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?






