ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் கோண்டா அருகே விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
Uttar Pradesh Train Accident : சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் கோண்டா அருகே பிகவ்ரா சென்றபோது, எதிர்பாராத நேரத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
இதனால் அடுத்தடுத்து அட்டைப்பெட்டி போல் ரயில்பெட்டிகள் சரிந்ததில், ஒருவர் உயிரிழந்ததாகவும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ள நிலையில், அதிகாரிகள் நிலையை கண்காணித்து வருவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் காயமடைந்த நிலையில், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அம்மாநில துணை முதலமைச்சரும், சுகாதார அமைச்சருமான பிரஜேஷ் பதாக் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து, திப்ருகர் எக்ஸ்பிரஸின் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில், உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில்வே துறை பயணிகளுக்காக திப்ருகர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை, ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மன்காபூரில் இருந்து திப்ருகருக்கு புறப்படும்.
விபத்து குறித்து ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. “மோடி ஆட்சியில் ரயில் விபத்துகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரீல்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மோடி அரசாங்கத்தின் திறமையின்மையால் நாட்டு மக்கள் இன்னும் எவ்வளவு காலம் தாங்குவார்கள்” என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






