சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு: சர்ப்ரைஸ் கொடுத்த L&T சேர்மன்
விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன். வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. ஞாயிற்றுக் கிழமை வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப் போறீங்க? என ஊழியர்களை நோக்கி இவர் அடித்த கமெண்ட் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.இந்நிலையில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒருநாள் மாதவிடாய் விடுப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன்.
மாதவிடாய் விடுப்பு தொடர்பான கொள்கைகள் (policy) சமீப காலமாக பேசுப் பொருளாகி உள்ளன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 2024-ல் ஒடிசா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது பலரது பாரட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து Swiggy மற்றும் Zomato போன்ற டெலிவரி நிறுவனங்களும் தங்கள் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
பயனடையும் 5,000 ஊழியர்கள்:
L&T (எல் அண்ட் டி) நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 60,000 பணியாளர்களில் தோராயமாக 9 சதவீதம் பெண்கள் தான். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய சுப்பிரமணியன் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய “மாதவிடாய் விடுப்பு” வழங்குவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் L&T (எல் அண்ட் டி) நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 5,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தெரிவித்துள்ளது. அறிவிப்பினைத் தொடர்ந்து இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வாங்க பாஸ்:
மேலும், இந்த அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக "வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகளும் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யத் தொடங்குங்கள். உண்மையில் சொல்லப் போனால், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை (ஊழியர்களை) வேலை செய்ய வைக்க முடியாததற்கு நான் வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் நானும் வேலை செய்கிறேன். உங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்று L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்த கமெண்ட் தான் இவர் சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட காரணமாக அமைந்தது.
தற்போது அதே எஸ்.என்.சுப்பிரமணியன் மாதவிடாய் விடுப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஒரு சிலருக்கு அதிர்ச்சியை தந்திருந்தாலும், அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Read more:
தாலி..குங்குமம் இல்ல? அப்புறம் எப்படி கணவர் அன்பா இருப்பாரு? நீதிபதியின் சர்ச்சை கருத்து
பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?
What's Your Reaction?






