பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?

கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Mar 7, 2025 - 08:16
 0
பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?
நரேந்திர மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருதான 'ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' (Honorary Order of Freedom of Barbados) விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸின் தலைநகர் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ர மார்கரிட்டா கலந்து கொண்டு இந்த விருதை பெற்றுக் கொண்டார். 

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கயானா நாட்டின் ஜார்ஜ் டவுனில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-கரிகாம் தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக மோட்லி குறிப்பிட்டார். தொற்றுநோய் பரவல் காலத்தில் சர்வதே ஒத்துழைப்பையும், ஆதரவையும் வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றியதாகவும் அவர் பாராட்டியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் தொடங்கியதில் இருந்து இந்தியாவும் பார்படாஸும் தொடர்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் ஒரு வலுவான ஒத்துழைப்பை வளர்த்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் சார்பாக விருதை பெற்ற இணையமைச்சர் பபித்ர மார்கரிட்டா, பார்படாஸ் நாட்டின் இந்த அங்கீகாரத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி சார்பாக இந்த மதிப்பிற்குரிய விருதை பெற்றுக் கொள்வதை பெருமையாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான ஆழமான உறவை வெளிகாட்டுகிறது. குறிப்பாக நெருக்கடி காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது" என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow