பட்ஜெட்டில் மறந்தும் கூட தமிழ்நாடு பெயரை உச்சரிக்காத நிர்மலா சீதாராமன்.. முழுமையாக புறக்கணிப்பு!
CM Stalin on Union Budget 2024 : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 1 மணி நேரம் 27 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். ஆனால் இதில் தமிழ்நாடு குறித்த திட்டங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ், தமிழ்நாடு என்ற பெயரை மறந்தும் கூட அவர் உச்சரிக்கவில்லை.

CM Stalin on Union Budget 2024 : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு முதல் மாதம் மத்திய அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதிய வருமான வரி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி ஏதும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் முக முக்கியமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும், நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும் பல ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 1 மணி நேரம் 27 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். ஆனால் இதில் தமிழ்நாடு குறித்த திட்டங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ், தமிழ்நாடு என்ற பெயரை மறந்தும் கூட அவர் உச்சரிக்கவில்லை. இதற்கு முன்பாக 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், ஏதாவது ஒரு திருக்குறளை வாசித்துதான் பட்ஜெட்டை உரையை தொடங்குவார்.
ஆனால் இன்று அந்த திருக்குறளையும் அவர் மறந்து விட்டார். ஆந்திர பிரதேசம், பீகார், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு குறித்து உரை முழுவதும் ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. அசாம், இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளதடுப்பு பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு வரும் நிலையில், இது குறித்து பட்ஜெட்டில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
சில நாட்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட விஷயங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார்.
ஆனால் இதில் ஒன்று கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி தமிழ்நாடு மீதும், தமிழர்கள் மீதும் பாச மழை பொழிந்தது வெறும் நாடகமா? தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால்தான் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு ஏறெடுத்து பார்க்குமா?'' என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?






