Vaadivaasal Movie Update : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா, சூர்யா 44 படங்களில் இருந்து அப்டேட்கள் வெளியாகிவிட்டன. இதெல்லாம் சூர்யா ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தியாக இருந்தாலும், அவர்களது ஹைப் என்னவோ வாடிவாசல் படம் பற்றி தான். வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் தான் வாடிவாசல். சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பின்னணியாக வைத்து இப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். அதன்படி இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு தான் மிக முக்கியமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
வெற்றிமாறனின் ஃபேவரைட் ஹீரோ என்றால் அது எப்போதுமே தனுஷ் தான். அவர் இல்லாமல் விசாரணை, விடுதலை போன்ற சின்ன பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் வெற்றிமாறன். ஆனால் வாடிவாசல் படத்தில் தனுஷ் இல்லாமல் சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனால் இந்தப் படம் பற்றி அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேவேகத்தில் டைட்டில் டீசராக ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது வாடிவாசல்.
டைட்டில் டீசர் வெளியானதுமே வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என சொல்லப்பட்டது. ஆனால், அப்போது வெற்றிமாறன் இயக்கி வந்த விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடியாததால், வாடிவாசல் தொடங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. இப்போது விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீர் கமிட்டானதால், சூர்யா விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. பருத்திவீரன் சர்ச்சையில் அமீருக்கும் சூர்யா குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே ஒரு வாய்க்கால் தகராறு சென்றுகொண்டிருக்கிறது.
இதனால், வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பில்லை என்பதோடு, அவருக்குப் பதிலாக தனுஷ் நடிக்கலாம் என பேச்சுகள் அடிப்பட்டன. அதேபோல், சூர்யாவும் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருவதால் வாடிவாசல் ட்ராப் ஆகிவிடும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளுக்கெல்லாம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில், வாடிவாசல் படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தாணு, வாடிவாசல் கண்டிப்பாக வரும் எனவும், சீக்கிரமே ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது வாடிவாசல் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நடக்கும் போது, அதில் உண்மையான ஜல்லிக்கட்டு காளையை நடிக்க வைத்திருந்தார் வெற்றிமாறன். அப்போது சில காட்சிகளை இயக்குவதில் ரிஸ்க் இருந்ததாகவும், அப்படியே படப்பிடிப்பு நடத்தினால் சூர்யா உட்பட நடிகர்களுக்கும், அந்த காளைக்கும் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் லண்டனில் கிராபிக்ஸ் மூலம் காளையை உருவாக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது முழுமையாக முடிய கொஞ்சம் லேட் ஆனதால் மட்டுமே வாடிவாசல் இன்னும் தொடங்கவில்லை என்றார்.
அதனால், விடுதலை 2ம் பாகம் ஷூட்டிங் முடிவதற்குள், வாடிவாசலுக்கு காளை ரெடியாகிவிடும். எனவே இந்தாண்டு இறுதிக்குள் வாடிவாசல் படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும் என கலைப்புலி எஸ் தாணு அப்டேட் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களும் வாடிவாசல் படத்தை எதிர்பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.