சினிமா

நடிகை சனம் ஷெட்டியிடம் நூதன மோசடி.. செல்போன் எண் செயலிழக்கப் போவதாக கூறி பணம் பறிக்க முயற்சி

பிரபல நடிகை சனம் ஷெட்டியிடம் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி சைபர் கிரைம் மோசடி முயற்சி  நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சனம் ஷெட்டியிடம் நூதன மோசடி.. செல்போன் எண் செயலிழக்கப் போவதாக கூறி பணம் பறிக்க முயற்சி

தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் நடிகையான சனம் ஷெட்டி, அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பிரபலமாகியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக புகார் அளித்து பரபரப்பாக பேசப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு கேரள திரை உலகில் உள்ளது போல் தமிழ் திரை உலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டையும் வெளிப்படுத்தினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்திருந்தார்.

இந்நிலையில் தனது சமூக வலை தளப்பக்கத்தில் தனக்கு நடந்த சைபர் கிரைம் மோசடி முயற்சி தொடர்பாக விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். செல்போன் மூலமாக ஆவணங்கள் கேட்டால் யாருக்கும் கொடுக்காதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னையே சைபர் கிரைம் மோசடியில் விழ வைக்க முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார்.

அதில் தனக்கு செல்போன் மூலமாக டெலிகாம் நிறுவனத்திலிருந்து அழைப்பு ஒன்று வந்ததாக தெரிவித்துள்ளார். அதில் பேசிய நபர் இரண்டு மணி நேரத்தில் தங்களது செல்போன் செயலிழக்க உள்ளதாகவும் மும்பையில் இருந்து வாங்கப்பட்ட உங்கள்  செல்போன் நம்பர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். உங்கள் செல்போன் எண் மூலமாக பலருக்கும் தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளதாக டெலிகாம் நிறுவனத்திலிருந்து ஒருவர் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாக விஜய் ஜோபே என்பவர் தொடர்ந்து பேசியதாகவும் கூறியுள்ளார். உங்களைப் பற்றிய ஆவணங்களை தர வேண்டும் எனவும் அப்போதுதான் இந்த வழக்கிலிருந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் தப்பிக்க முடியும் எனக் கூறி ஆவணங்கள் கேட்டதாக தெரிவித்துள்ளார். தான் மும்பைக்குச் சென்று பல நாட்கள் ஆனதாகவும், இந்த ஒரு நம்பரை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆதார்  நம்பரை பயன்படுத்தி செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்டிருப்பதால் தன்னுடைய ஆவணங்களை, டெலிகாம் நிறுவனம் மற்றும் காவல்துறை எளிதில் எடுக்கலாம் என்ற நிலையில் தன்னிடம் ஆவணங்களை கேட்டபோது எச்சரிக்கை அடைந்ததாக தெரிவித்துள்ளார். தன்னைப் போன்றே மற்றொரு பெண்ணுக்கும் இதேபோன்று அழைப்பு வந்ததாகவும், ஆனால் அவருக்கு வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்தால் அந்தப் பெண்ணின் வங்கி சேவைகள் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுபோன்று செல்போன் அழைப்புகள் வந்தால் உடனடியாக துண்டித்துவிடவும், தங்களது தகவல்கள் எதுவும் கொடுக்கவேண்டாம் எனவும் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர்கள் அனுப்பும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை நடிகை சனம் செட்டி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஷாலு சம்மூவிடம் கிரெடிட் கார்டு மோசடி செய்ய முயன்றது தொடர்பாக விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மற்றொரு நடிகை சைபர் க்ரைம் மோசடி குறித்து வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.