'பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிய பட்ஜெட்'.. ட்வீட் போட்டு கலாய்த்த ராகுல் காந்தி!
Rahul Gandhi Criticize Union Budget 2024 : ''சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. அத்துடன் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு காப்பி, பேஸ்ட் செய்துள்ளது'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul Gandhi Criticize Union Budget 2024 : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு, ஏழைகள் என பல்வேறு தரப்பினருக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பும், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்ற அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும், நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும் பல்வேறு திட்டங்களுக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, இது பாஜகவின் நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்கான பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''மத்திய பட்ஜெட்டில் பாஜகவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்தும் வகையில் வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தனது நெருங்கிய நண்பர்களை சமாதானப்படுத்தும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. அத்துடன் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு காப்பி, பேஸ்ட் செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''நாட்டின் முன்னேற்றத்துக்காக இந்த பட்ஜெட்டை தயாரிக்கவில்லை. தனது கூட்டாளிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மேலும் காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ''மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பியடித்து பட்ஜெட்டில் இடம்பெறச் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
இது தவிர மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ''நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுவதை கடந்த 10 ஆண்டுகளாக மறைத்து வந்த மத்திய அரசு, அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளதன் மூலம் வேலைவாய்ப்பின்மையை ஒப்புக்கொண்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
''மத்திய அரசு ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக பீகார், ஆந்திர பிரதேசத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அதிக திட்டங்களை அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு அதிக நிதி ஓதுக்கீடு செய்யாதது ஏன்'' என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?






