Dog Meat Sales in Bengaluru: நமது நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அசைவம் சாப்பிடுவதே மிகவும் அரிதாக இருக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையை ஒட்டிய கரி நாள் ஆகிய நாட்களில் மட்டும் வீடுகளில் ஆடு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை மக்கள் சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. வீடுகளில் வாரம்தோறும் அசைவம் சமைக்கப்படுகிறது. சிலர் வார இறுதி நாட்களில் வீடுகளில் சமைக்காமல் ஹோட்டல்களுக்கு குடும்பத்துடன் சென்று அசைவ உணவுகளை சாப்பிட்டு திருப்தி அடைகின்றனர். வீடுகளில் அசைவம் சமைத்தாலும் சரி, ஹோட்டல்களுக்கு சென்று அசைவம் சாப்பிட்டாலும் சரி அது சுத்தமான, சுகாதாரமான இறைச்சியா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
வாரம்தோறும் அசைவம் சாப்பிட்டால் உடலில் புரதச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அதிகரிக்கும் என்பது மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. ஆனால் அது நல்ல இறைச்சியா? என நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரிஜினல் ஆட்டுக்கறிக்கு பதிலாக கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுதுகிறது.
அதுவும் தென் மாநிலங்களின் சில இடங்களில் ஆட்டுக்கறி எனக்கூறி நாய்க்கறி விற்பனை செய்வதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஏராளமான நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதால், நாய்க்கறி விற்பனை செய்யப்படுகிறதா? என அச்சம் எழுந்தது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுனங்களின் தலைநகரமான பெங்களூரு தற்போது இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவின் யஸ்வந்த் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் சுமார் 3 டன் அளவு கொண்ட ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டது. 150 பாக்ஸ்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டு இறைச்சிகளுடன் நாய் இறைச்சிகளும் உள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியானது.
இதனை அறிந்த இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் 4,500 கிலோ நாய் இறைச்சியை கொண்டு வந்து ஆட்டுக்கறி எனக்கூறி விற்பனை செய்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரயில் மூலம் ஜெய்ப்பூரில் இருந்து ஆட்டு இறைச்சியை இறக்குமதி செய்தவரிடம் போலீசார் விசாரித்தபோது, முறையான சட்ட ஆவணங்களுடன் இறைச்சியை இறக்குமதி செய்ததாக அவர் கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து வந்த பார்சலில் இருப்பது ஆட்டு இறைச்சியா? அல்லது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டும் நாய் இறைச்சியா? என பார்சல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை வைத்து பெங்களூருவாசிகள் சமூகவலைத்தளத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். ''அடப்பாவிகளா.. இவ்வளவு நாள் நாம ஆட்டுக்கறி என நினைத்து என சாப்பிட்டது நாய்க்கறியா? இது தெரியாமா ருசித்து, ருசித்து சாப்பிட்டோமா''என்று வேடிக்கையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.