சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்து ஐபோன் வாங்கிய பூ வியாபாரி மகன்.. நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய காலக்கட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பள்ளி செல்லும்போதே செல்போன், பைக் என அந்த வயதில் தேவையில்லாத பொருட்கள் பிள்ளைகளுக்கு கிடைத்து விடுகிறது.

Aug 19, 2024 - 14:15
Aug 19, 2024 - 14:21
 0
சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்து ஐபோன் வாங்கிய பூ வியாபாரி மகன்.. நெட்டிசன்கள் கண்டனம்!
Boy Buy Iphone

டெல்லி: பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்கின்றனர். 2000ம் ஆண்டுக்கு முன்பு வரையிலான காலக்கட்டங்களில் பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்து விட மாட்டார்கள்.

தங்களது பிள்ளைகளுக்கு அந்த பொருள் தேவையா? தேவையில்லையா? என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தே பிறகே வாங்கிக் கொடுப்பார்கள். அதுவும் கையில் தேவைக்கு மீறிய பணம் இருந்தால் மட்டுமே வாங்கி கொடுப்பார்கள். இதற்காக கடன் வாங்க மாட்டார்கள். நான் சொல்ல வருவது, சிறு வயதில் ரிமோட் கார் வாங்க வேண்டும் என்று வாங்கப்பட்டு அந்த ஆசை நிராசையாக போன 90 கிட்ஸ்களுக்கு நன்கு புரியும்.

ஆனால் இப்போதுள்ள பெற்றோர்கள் இதற்கு எதிர்மாறாக உள்ளனர். தங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பள்ளி செல்லும்போதே செல்போன், பைக் என அந்த வயதில் தேவையில்லாத பொருட்கள் இப்போதுள்ள குழந்தைகளுக்கு கிடைத்து விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு நாம் என்ன கேட்டாலும் பெற்றோர்கள் வாங்கி கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் உருவாகி விடுகிறது.

அப்படி தாங்கள் விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால் பிடிவாதம் செய்தாவது அதை பெற்று விட வேண்டும் என்ற எண்ணமும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு உருவாகி விட்டது. இதற்கு உதாரணமாக இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு அம்மாவும், அவரது மகனும் ஒரு செல்போன் கடையில் ஐபோன் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபோன் வாங்கும்போது, அந்த சிறுவனின் தாய் கடைக்காரரிடம், ''நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கிக் கொடுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தான். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். ஆனால் ஐபோன் வாங்கி தந்தால்தான் சாப்பிடுவேன் எனக்கூறி 3 நாட்களாக பட்டினி கிடந்தான். இதனால் இன்று ஐபோன் வாங்கிக் கொடுக்கிறேன்'' என்று பேசும் வீடியோ வைரலானது.

அதாவது அந்த சிறுவன் பிடிவாதம் செய்து சாப்பிடாமல் பட்டினி கிடந்து பெற்றோரை கட்டாயப்படுத்தி ஐபோன் வாங்கியுள்ளான். மேலும் அந்த சிறுவனின் தாய் பூ வியாபாரி என்பதும் மகன் பிடிவாதம் செய்ததால் வேறு வழியின்றி அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி ஐபோன் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் இந்தியாவில் எங்கு நடந்தது என தெரியவில்லை. 

ஆனால் இந்த வீடியோவை பார்த்து நெட்டின்சன்கள் பலரும் சிறுவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''பெற்றோர்கள் குழந்தைகள் மீது பாசம் வைப்பது தவறு இல்லை. ஆனால் அந்த பாசம் அளவு கடந்து செல்லக் கூடாது. இந்த சிறுவனை போலத்தான் இப்போது நாட்டில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். பெற்றோர்கள் கேட்கும்போதெல்லாம் பொருளை வாங்கிக் கொடுப்பதால்தான் பிள்ளைகள் இப்படி பிடிவாதம் செய்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளனர். 

''நாம் வளர்ப்பதை பொறுத்துதான் பிள்ளைகள் வளர்வார்கள். சிறு வயதில் இருந்தே பிள்ளைகளை கொஞ்சம் கண்டிப்புடன் நமது குடும்ப சூழ்நிலையை தெரிய வைத்து வளர்க்க வேண்டும். இல்லாவிடில் இந்த சிறுவனை போன்ற பிள்ளைகள்போல்தான் அவர்கள் இருப்பார்கள்'' என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow