Mohanlal Health: ”மூச்சுத் திணறல், காய்ச்சல்... மருத்துவமனையில் அனுமதி..” மோகன்லால் ஹெல்த் அப்டேட்!
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் மோகன்லாலின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், தற்போதைய அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை பாசிட்டிவான ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
கொச்சி: மலையாள திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் மோகன்லால், தமிழிலும் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் தோல்வியடைந்தது. இதனையடுத்து மோகன்லால் நடித்த மனோரதங்கள் என்ற ஆந்தலாஜி சீரிஸ், கடந்த வாரம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், மோகன்லால் திடீரென உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதீத காய்ச்சல், மூச்சுத் திணறல், தசை வலி போன்ற காரணங்களால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மோகன்லால் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 64. பிருத்விராஜ் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் மோகன்லால். L2 எம்புரான் என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் குஜராத்தில் நடைபெற்று வந்தது.
அதில் பங்கேற்றுவிட்டு தான் இயக்கும் பரோஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார் மோகன்லால். அப்போது தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதில் மோகன்லால் வைரஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அதிகமுள்ள கூட்டமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க - ஒரேநாளில் வெளியாகும் வேட்டையன்–கங்குவா
சில தினங்களுக்கு முன்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார் மோகன்லால். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற சிறப்பு பதவியில் இருக்கும் மோகன்லால், மிலிட்டரி யூனிஃபார்ம் அணிந்தபடி வயநாடு சென்றிருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வயநாடு பேரிடர் குறித்து உருக்கமாக பேசியிருந்தார். மேலும் தனது அறக்கட்டளை மூலம் 3 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மோகன்லால், விரைவில் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தொடர்ந்து பிருத்விராஜ் இயக்கும் L2 எம்புரான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மோகன்லால் நலமாக இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள், இன்னும் விரைவாக அவர் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?