'இரட்டை வேடம் போடும் மமதா பானர்ஜி'.. மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!
மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைத்தனர்.
மேலும் மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி படுகொலையில் அவருடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
இது தவிர மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தனது மாநிலத்தில் பெண்களை பாதுகாக்க தவறிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை வைத்து, தனது மகளின் படுகொலையில் மமதா பானர்ஜி இரட்டை வேடம் போடுவதாக மருத்துவ மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''எனது மகளின் படுகொலை குறித்து மமதா பானர்ஜி நீண்ட நேரம் பேசுகிறார். எனது மகளுக்கு நீதி கேட்டு சாலையில் பேரணியாக செல்கிறார். அதே வேளையில் எனது மகளுக்காக நீதி கேட்டும் போராடுபவர்களை மமதா பானர்ஜி ஒடுக்க முயற்சிக்கிறார்.
காவலர்கள் தங்களை ஒடுக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். ஏன் இந்த இரட்டை வேடம்? மக்களை பார்த்து மமதா பானர்ஜி பயப்படுகிறாரா? அவரிடம் இருந்து இதற்கான பதில்களை எதிர்பார்க்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?