தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மாநிலங்கள் அளிக்கும் நிதி பகிர்விற்கு ஏற்ப நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் கூறுகிறது. மேலும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இரண்டாயிரத்து 152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
அதாவது, மும்மொழிக்கொள்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ ' திட்டத்தில் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல் மறுத்து வருகிறது. மேலும், தமிழக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஏபிவிபி மற்றும் மாநிலங்களுக்கிடையேயான மாணவர் வாழ்வியல் அனுபவம் ஆகிய அமைப்புகளின் முன்னெடுப்பில் நடந்த ராஷ்ட்ரீய ஏகத்மதா யாத்திரை 2025-ல் அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 11 ஆண்டுகளாக மகாபாரதத்தின் அர்ஜுனனைப் போன்ற மோடி அரசின் கூரிய கவனம் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் மீது உள்ளது.
மகாராஷ்டிராவில் முன்பு இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசின் சில தலைவர்கள், மகாராஷ்டிரா செலுத்திய வரி பங்கீட்டை கணக்கிட்டு, மத்திய நிதியில் இருந்து அதே அளவு நிதியினை பெற வேண்டும் என்று கோருகின்றனர். இது சிறுபிள்ளை தனமானது. இதேபோல், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களும் அவை செலுத்திய வரியை நிதியாக பெறவேண்டும் என்று கோரி வருகின்றன. இதை விட சிறுபிள்ளைத்தனமான விஷயம் வேறு இருக்க முடியாது.
மத்தியில் இருக்கும் மோடி அரசு கடந்த 11 ஆண்டுகளாக, கிழக்கை நோக்கி செயல்படுங்கள், கிழக்கை திரும்பி பாருங்கள் என்று வடகிழக்கை முன்னிலைபடுத்தும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. மோடி அரசின் கீழ், வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு நெடுஞ்சாலை வலையமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.