திருப்பத்தூர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மனைவி சத்யா கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இவருக்கு கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காட்பாடி பகுதியில் ஒன்றாக இணைந்து கார் ஓட்டும் (டிரைவர்) தொழிலை செய்து வந்துள்ளனர். இதையடுத்து வீரபத்திரன் காட்பாடியில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனது மனைவி சத்யாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீரபத்திரன் மனைவி சத்யாவிற்கும் அவரது கணவரின் நண்பரான சுரேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்து கொண்ட வீரபத்திரன், சுரேஷ் உடனான பழக்கத்தை துண்டித்து கொள்ளும் படி சத்யாவிடம் கூறியுள்ளார். ஆனால், சத்யா, சுரேஷ் உடனான உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த வீரபத்திரன் மனைவியை காட்பாடியிலேயே விட்டுவிட்டு தனது சொந்த ஊரான ராஜபாளையத்திற்கு திரும்பி வந்துள்ளார்.
ஒரு சில மாதங்களில் சத்யாவின் தந்தை காலமானதைத் தொடர்ந்து சத்யா, வீரபத்திரனுடன் சமாதானம் பேசியுள்ளார். மேலும், வீரபத்திரனுடன் இணைந்து வாழ்வதாக கூறி அவருடன் வசித்து வந்துள்ளார். சத்யா, சுரேஷ் உடனான உறவை துண்டித்த நிலையில் சுரேஷ் தொடர்ந்து சத்யாவை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
அது பலனளிக்காததால் சுரேஷ் தனது நண்பர்களான ஜாபார், கர்ணன், மணிகண்டன், சசிதரன், மேகராஜ் ஆகிய ஐந்து பேரையும் ராஜபாளையம் பகுதியில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்து பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், சத்யாவின் வீட்டிற்குள் சென்ற சுரேஷின் நண்பர்கள் வீரபத்திரன், சத்யாவின் தாய் மற்றும் குழந்தைகளை தாக்கி அறையில் தள்ளி பூட்டியுள்ளனர். கர்ணன், சத்யாவை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த 15 சவரன் தங்கநகை, ஒரு லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். சத்யாவின் வீடியோவை கர்ணன், சுரேஷிடம் கொடுத்துள்ளார்.
வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சுரேஷ் உட்பட நான்கு பேரையும் போலீசார் கையும், களவுமாக கைது செய்து அவர்கள் கொண்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர், கர்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.