7 அடி ஆழ குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்.. நடந்தது என்ன?
ஹரியானாவில் 7 அடி ஆழ குழியில் யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் ரோக்தக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஜக்தீப் என்ற நபர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜனதா காலனியில் மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜக்தீப்பை கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது உறவினர்கள் பிப்ரவரி 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஜக்தீப் பணியாற்றிய பல்கலைக்கழகம், அவர் வசித்த காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, தனது வீட்டில் இருந்த ஜக்தீப்பை கை, கால்களை கட்டியபடி இருவர், வாகனத்தில் கடத்தி செல்லும் காட்சியை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக தர்ம்பால் மற்றும் ஹர்தீப் என்ற இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஜக்தீப்பை பெண்டாவஸ் கலன் (Pentaawas Kalan) என்ற பகுதிக்கு அழைத்து சென்று உயிருடன் புதைத்து விட்டதாக இருவரும் கூறினர்.
ஜக்தீப் உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 7 அடி ஆழ குழியில் இருந்து ஜகதீப் உடலை தோண்டி எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது, ராஜ்கரண் என்பவரின் மாமியார் வீட்டில் ஜக்தீப் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது ராஜ்கரண் மனைவி தனது பெற்றோரை பார்ப்பதற்காக அவர்களது வீட்டிற்கு வரும் பொழுது ஜக்தீப் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுகிறது. ஜக்தீப்புக்கும் தனது மனைவிக்கு இடையே இருந்த திருமணத்தை மீறிய உறவை அறிந்த ராஜ்கரண் எப்படியாவது ஜக்தீப்பை கொன்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முக்கிய குற்றவாளியான ராஜ்கரண் தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






