இந்தியா

எல்லையில் சீனா ஊடுருவல்: மக்களவையில் ராகுல் காந்தி மைக் துண்டிப்பு!

ராணுவம் தொடர்பான குறிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மைக் துண்டிக்கப்பட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

எல்லையில் சீனா ஊடுருவல்: மக்களவையில் ராகுல் காந்தி மைக் துண்டிப்பு!
Rahul Gandhi Mic Muted
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோது, லடாக்கில் நிலவும் சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கையில் எடுத்தார். இது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதமாக மாறியது.

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு

விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, லடாக்கில் சீனா ஊடுருவியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். தனது வாதத்தை மெய்ப்பிக்க, இந்திய முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதியுள்ள, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத சுயசரிதை புத்தகத்தைப் பற்றிய ஒரு இதழ் கட்டுரையை அவையில் உயர்த்திக் காட்டினார். அந்தக் கட்டுரையில் உள்ள முக்கியக் குறிப்புகளை ராகுல் வாசிக்கத் தொடங்கியபோது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அதிகாரப்பூர்வமாக வெளிவராத ஒரு புத்தகத்தைப் பற்றி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அவையில் பேசுவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது" என்று ராஜ்நாத் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். சபாநாயகரும் ராகுல் காந்திக்கு அறிவுரை வழங்கினார்.

மைக் துண்டிப்பு: அமளியான அவை

ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சிற்குத் தொடர்ந்து அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "சீனா தொடர்பான விவகாரம் மிகவும் தீவிரமானது; இது குறித்து மக்களவையில் பேச அனுமதி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

சபாநாயகரின் விளக்கம்

அவையில் நிலவிய கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேசிய சபாநாயகர், "சபையில் பேசப்படும் தகவல்கள் ஆதாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். உறுதிப்படுத்தப்படாத புத்தகக் குறிப்புகளை வாசிக்க அனுமதி கிடையாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் மைக் துண்டிக்கப்பட்டதை ஜனநாயகம் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சியினர் கடுமையாகச் சாடி வருகின்றனர்.