Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு கடன் 5 லட்சமாக உயர்வு... பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம்!
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அதன்படி, கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவை, 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் கிரிஷி யோஜனா திட்டத்தின் கீழ், வேளாண் மாவட்ட திட்டங்கள் என்ற புதிய திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இதன்மூலம், குறைந்தளவு வேளாண் உற்பத்தி கொண்டிருக்கும் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆத்ம நிர்பாரத் திட்டத்தின் கீழ், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான 6 ஆண்டு கால திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அரசு முகமைகள் விவசாயிகளிடமிருந்து, நேரடியாக இந்த பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
உலகம் முழுவதும் தற்போது மக்கானாவிற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் மக்கானா வாரியம் நிறுவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கானா உற்பத்தி, மதிப்பு கூட்டுவது, சந்தைப்படுத்துவது என அனைத்து உதவிகளையும் இந்த மக்கானா வாரியம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பழங்கள், காய்கறிகளின் உற்பத்தியை பெருக்கத் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம் கொண்டு வரப்படும் எனவும், அசாமில் யூரியா உற்பத்தி ஆலை கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?