Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Feb 1, 2025 - 10:46
Feb 1, 2025 - 12:19
 0
Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?
நிர்மலா சீதாராமன்

Union Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2025 - 26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை  தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் ஆகும். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அதில் 2025 - 26ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

முக்கியமாக இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்றும், புதிதாக சில வரி அடுக்குகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  

பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது, அரசின் மதிப்பீடாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில், நிதி மசோதா2025, வக்பு மசோதா, வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா, இந்தியன் ரயில்வே, இந்தியன் ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், பட்ஜெட் ஆவணங்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தில் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். முன்னதாக இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை குறிப்பிட்டு, பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், அன்னை லட்சுமி நடுத்தர வர்க்கத்தினரை ஆசீர்வதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 300 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow