அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை சார்பில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, தடையை மீறி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதனால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற செளமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது.
இன்று தனது கண்டனத்தை தெரிவிக்க வந்த பாமகவை சார்ந்த சகோதரி சௌமியா அன்புமணியை போராட்டக்குரல் எழுப்புவதற்கு முன்பே கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தொடர் கைதுகள் உண்மையை மூடி மறைத்து விட முடியாது. போராட்டங்களை அடக்கு முறையால் முடிவுக்கும் கொண்டு வர முடியாது. திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. ஆம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு முடிவுக்கு வரும் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?