நீலகிரி: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிதீவிர கனமழை(Heavy Rain In Nilgiris) பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அங்கு அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுவித்துள்ளது. நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்தம் 100 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 97அடியை கடந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் இது அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பவானியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.