சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கனிமவளக் கொள்ளையை தடுத்தவர் கொலை உயிர்போனால் தான் நடவடிக்கையா?
''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலராக பல்வேறு காரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். திருமயம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்தும், கனிம வளக் கொள்ளை தொடர்பாகவும், துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் புகார் மனு அளித்து வந்துள்ளார். ஆனால் அவரது புகாரை யாரும் சீண்டக்கூடவில்லையாம்.
இந்த நிலையில்தான் கடந்த 17ஆம் தேதி டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஜகபர் அலி உயிரிழக்க, விசாரணையின் முடிவில் அது திட்டமிட்ட கொலை என தெரியவந்தது. கொலை தொடர்பாக ஆர்.ஆர். கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் சதீஷ், டிப்பர் லாரி உரிமையாளர் முருகானந்தம், ஓட்டுநர் காசி என ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களின் அழுத்தத்தை தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர்.
ஜகபர் அலி உயிரோடு இருந்து புகார் அளித்தவரைக்கும் நடவடிக்கை எடுக்காத அரசு துறைகள் இன்று அவர் கொலையாகி மண்ணில் விதைக்கப்பட்ட பின்னர் தூக்கம் கலைத்திருக்கிறது.
பணியில் கவனக்குறைவாக இருந்ததாக திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருமயம் வட்டாட்சியர் புவியரசன், வருவாய் ஆய்வாளர் செல்வம், துளையாணூர் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராசு, ராமையாவுக்கு சொந்தமான ஆர்,ஆர் கல்குவாரிகளில் திருச்சி, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் கற்களை வெட்டி எடுத்த பகுதிகளில் அளவீடு செய்ததில் அரசு நிர்ணயித்த அளவைவிட 6,000 கியூபிக் மீட்டர் அதிகமாக கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 2003 ஆண்டிலேயே சில சர்வே எண்களில் உரிமம் முடிந்தும் தொடர்ச்சியாக கற்களை வெட்டி எடுத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி, தனது கடைசி பேட்டியில் 70 ஆயிரம் டன் எடை கொண்ட கற்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தபடி, 70 ஆயிரம் டன் எடை கொண்ட சக்கை என்று சொல்லக்கூடிய கற்களை பதுக்கி வைத்திருந்ததும், கொலைக்குப் பின்னர் அதை திருப்பி எடுத்து வந்து குவாரியில் கொட்டியுள்ளதையும் தற்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அரசிடம் இருந்து ஏலம் எடுக்கப்பட்டு நடத்தப்படும் கல்குவாரி, மணல்குவாரி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வதும், விதிமீறல்களை கண்டறிவதும் அதிகாரிகளின் கடமையாகும். அப்படி அதிகாரிகள் செய்யத் தவறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இங்கு அதிகாரிகள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்பதே ஜகபர் அலியின் கொலையின் பின்னணியாக இருக்கிறது.
விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ததாக ஐவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. ஆனால் கடமையில் இருந்து தவறியவர்களை வெறும் பணியிட மற்றம் மட்டுமே செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதுதான் அவர்களுக்கான தண்டனையா? அல்லது நடவடிக்கையை கடுமையாக்கினால் கனிமவளக் கொள்ளையின் பின்னால் மறைந்திருக்கும் விஐபிக்கள் சிக்கிக் கொள்வார்கள் என்ற தயக்கமா என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கொலைக்குப் பின்னர் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்னரே எடுப்பதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தயக்கம் என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
What's Your Reaction?