39 பந்துகளில் 100 மற்றும் 99 ரன்கள் - அதிரடி காட்டிய ஆஸி.. அதிர்ந்துபோன விண்டீஸ்
அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார்.

உலக லெஜண்ட் சாம்பியன் லீக் 2024 தொடரின் லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 274 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடும் உலக லெஜண்ட் சாம்பியன் லீக் 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரின் 14ஆவது லீக் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நார்த்தம்ப்டனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் ஃபிஞ்ச் 7 ரன்களிலும், ஷான் மார்ஷ் 22 ரன்களிலும், கல்லம் ஃபெர்குஷன் 7 ரன்களிலும் வெளியேறினர். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஆஸ்திரேலிய வீரர் பென் டங்க், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால், பென் டங்க் 17 பந்துகளிலேயே அரைசதம் கண்டார்.
அவருக்கு உறுதுணையாக மற்றொரு வீரர் டேனியல் கிறிஸ்டியனும் அவரது பங்குக்கு பந்துகளை சிதறவிட்டார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார். ஆனால், அடுத்த பந்தே அவுட்டானார். பென் டங்க் வெளியேறியதும் ஆஸியின் ரன் வேகம் குறையும் என்று பார்த்தால், டேனியல் கிறிஸ்டியன் சிக்ஸரும், பவுண்டரியாக விளாசித் தள்ளினார்.
குறிப்பாக ஃபிடல் எட்வர்ட்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை டேனியல் கிறிஸ்டியன் குவித்தார். மேலும், 14 பந்துகளிலேயே அரைசதம் கண்டார்.
இதற்கிடையில், பென் கட்டிங் 22 ரன்களிலும், டிம் பெய்ன் 5 ரன்களிலும் வெளியேறினர். 19 ஓவரில் 29 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்த டேனியல் கிறிஸ்டியன் 20ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் 100 ரன்களை தொடுவதற்காக இரண்டாவது ரன் ஓட முயற்சித்த ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர், 35 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். முன்னதாக, பென் டங்க் 35 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடேனியல் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரிக் எட்வர்ட்ஸ் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து, சாட்விக் வால்டன் 4 ரன்களிலும், ஜோனாதான் கார்டர் 27 ரன்களிலும், ஜேசன் மொஹமது 2 ரன்களிலும் வெளியேற 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் மற்றும் ஆஷ்லே நர்ஸ் இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தனர். டுவைன் ஸ்மித் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய டேரன் ஷமி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்கள் எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே நர்ஸ் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார்.
நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதவுள்ளன. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இந்தியா அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






