வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!

''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Aug 31, 2024 - 21:25
Sep 1, 2024 - 10:06
 0
வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!
Rubina Francis

பாரீஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. பாராலிம்பிக் தொடரில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 22 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டுள்ளனர். 

பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் கலக்கி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை நேற்று அறுவடை செய்தது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த அவர் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். 

இதே போட்டியில் பங்கேற்று 228.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மோனோ அகர்வால் வெண்கல பதக்கம் வென்றார், இதனைத் தொடர்ந்து தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலம் வென்று சாதித்தார். இதன்பிறகு 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்று கலக்கினார். 

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 4 பதக்கங்களை வென்ற நிலையில், இன்று 5வது பதக்கமும் கிடைத்துள்ளது. இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்த ரூபினா பிரான்சிஸ் வெண்கலத்தை தட்டித்துக்கியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 உயர்ந்துள்ளது.

இந்தியா பெற்ற 5 பதக்கங்களில் 4 பதக்கங்களை வென்றது பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் நாட்டுக்காக வெண்கலம் வென்ற ரூபினா பிரான்சிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''பாராலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப்போட்டியில்  ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார். அவருடைய நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow