‘என் தந்தைக்கு மனநல கோளாறு’ - தோனி மீதான விமர்சனத்திற்கு பின் யுவராஜ் சிங் வீடியோ வைரல்
மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு காலகட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுவார்கள். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் அசாருதீன், அஜய் ஜடேஜா வரை ஓரளவுக்கு பார்ப்பார்கள்.
பிறகு ராபின் சிங், முகமது கைஃப் வருகைக்குப் பின், ஆட்டம் இறுதிவரை போகும் என்ற நம்பிக்கை பிறந்தது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி பொறுப்பேற்ற பிறகு, இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. கங்குலி தனது தொடக்க இடத்தை வீரேந்தர் சேவக் மற்றும் கவுதம் கம்பீருக்கு விட்டுக்கொடுத்தது வரலாறு.
அதேபோல், தோனி, யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் என இளம்படை வெளிநாடுகளிலும் வென்று அசத்தியது. அந்த வரிசையில், தோனி-யுவராஜ் சிங் கூட்டணி பல போட்டிகளில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தது.
குறிப்பாக ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற இரண்டு உலகக்கோப்பைகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். 2011 உலகக்கோப்பையில், யுவராஜ் சிங் 362 ரன்கள் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 57 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று வெற்றியை தேடித்தந்தார்.
இந்நிலையில், கடைசி காலகட்டங்களில் புற்றுநோய் தாக்குதலால், சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியாததால் யுவராஜ் சிங் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாழானதிற்கு, அப்போதைய கேப்டன் தோனி தான் காரணம் என்று அவரது தந்தை யோக்ராஜ் சிங் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, “தோனியை வாழ்நாளில் ஒருபோதும் நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும், எனது மகனுக்கு எதிராக அவர் செய்த அனைத்தும் இப்போது வெளிவருகிறது. 4, 5 ஆண்டு காலம்வரை எனது மகன் யுவராஜ் விளையாடி இருக்கக்கூடும். ஆனால், எனது மகனின் எதிர்காலத்தை தோனிதான் பாழாக்கினார்” என கூறி இருந்தார்.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபல சமூகவலைத்தளத்திற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் கூறியுள்ள யுவராஜ் சிங், ”"என் தந்தைக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக நான் உணர்கிறேன், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார்" என்று கூறியுள்ளார். மேலும், தனது தந்தை யோக்ராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையவில்லை என்றும், ஆனால், இதுபோன்ற சில விஷயங்களை அவர் ஏற்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






