அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள்!.. - ஒருநாள் கிரிக்கெட்டில் அபார சாதனை..
Scotland Player Charlie Cassell Record : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது அறிமுகப் போட்டியில்யே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்காட்லாந்து வீரர் சார்லி கெசல் அபார சாதனைப் படைத்துள்ளார்.

Scotland Player Charlie Cassell Record : ஐசிசியின் கிரிக்கெட் உலகக்கோப்பை லீக் 2 தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரான இதில் கனடா, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், ஓமன், யுஏஇ உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் இடம்பெறும் வகையில், இரண்டாம் நிலை அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிகள் ஐசிசி நடத்தும் தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கவும் அல்லது நேரடியாக இடம்பெறவும் வழிவகை செய்யும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்த தொடரின் 16ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஸ்காட்காந்து அணி வீரர் சார்லி கெசல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சார்லி கெசலுக்கு இதுதான் அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில், அறிமுகப் போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.
5.4 ஓவர்கள் வீசிய சார்லி கெசல் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து [ஒரு மெய்டன்] 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா நாட்டு பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சிறந்த பந்துவீச்சாக பதிவாகி இருந்தது. ரபாடாவின் 9 ஆண்டு கால சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தான் வீசிய முதல் இரண்டு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை தவறவிட்டார். ஆனால், 4ஆவது பந்திலேயே மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்து அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 17.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஜார்ஜ் முன்சே 23 ரன்களும், பிரண்டன் மெக்கல்லன் 37 ரன்களும், ரிச்சி பெரிங்டன் 24 ரன்களும் எடுத்தனர்.
What's Your Reaction?






