TTF Vasan: திருப்பதி கோயிலில் சேட்டையை காட்டிய TTF வாசன்... நடவடிக்கை எடுக்குமா TTD..?
பைக் ரேஸராக அட்ராசிட்டி செய்து வரும் TTF வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது திருப்பதி கோயிலில் தரிசனம் சென்ற போது, அங்கிருந்த பக்தர்களிடமும் வரம்பு மீறி நடந்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: கிரிஞ்ச்த்தனமாக பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதில் மன்னாதி மன்னன் TTF வாசன். தனது யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பைக் ரேஸ் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்து, அதில் வரும் வீவ்ஸ்களை வைத்து செமையாக காசு பார்த்து வந்தார். முக்கியமாக TTF வாசன் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு கல்லூரி மாணவ, மாணவிகளிடமும் வரவேற்பு கிடைக்க, ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமானார். அதோடு நிற்காமல் அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வரையிலும் TTF வாசன் புகழ் பரவியது.
ஏற்கனவே பைக் ரேஸ் செய்த சம்பவம் ஒன்றில் மாட்டிய TTF வாசனுக்கு, அவரது இருசக்கர வாகன லைசென்ஸ்ஸை 10 ஆண்டுகளுக்கு அதிகாரிகள் கேன்சல் செய்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக இன்னொரு பஞ்சாயத்திலும் அவர் சிக்கினார். இந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திருப்பதி கோயில் சென்ற TTF வாசன், அங்கும் சேட்டை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெருமாள் கோயிலில், தனது நண்பர்களுடன் தரிசனத்துக்காக காரில் சென்றுள்ளார் TTF வாசன். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் திருப்பதியில் தரிசனத்திற்காக செல்கின்றனர். இலவச தரிசனத்தில் 8 முதல் 24 மணி நேரம் வரை கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்க பலரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று வருவது வழக்கம். அதே இலவச தரிசனத்துக்காக TTF வாசனும் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். காரில் செல்லும் போதே, பின் சீட்டில் இருக்கும் TTF வாசனின் நண்பர், கியர் மீது கால் வைத்து சேட்டை செய்கிறார். மலைப் பாதையில் கார் ட்ரைவ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல், TTF வாசனும் அவரது நண்பர்களும் பயணிக்கின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் இலவச தரிசனத்துக்காக பக்தர்களுடன் நடந்து செல்லும் அவர்கள், சிலரை கிண்டல் செய்தபடியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் அட்ராசிட்டி செய்துள்ளனர். அதோடு தரிசனத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் போது, தனது அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவரை காட்டி, இவரும் நானும் சேர்ந்து ஒரு அக்காவை சைட் அடித்தோம் என அந்த வீடியோவில் கொச்சையாகவும் பேசியுள்ளார். தரிசனத்துக்கு சென்ற இடத்தில் இப்படித்தான் பெண்களை சைட் அடிப்பதா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
இதைவிட கொடுமையாக ஒரு பிராங்க் செய்துள்ளனர் TTF வாசன் & கோ. அதாவது தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களை, சிறு சிறு பிரிவாக தனித் தனி அறையில் தங்க வைக்கப்படுவார்கள். அது இரும்பு கம்பிகளால் உருவாக்கப்பட்டுள்ள அறைகளாகவும் இருக்கும். அவர்களுக்கான நேரம் வரும் போது அந்த அறையின் பூட்டை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது வழக்கம். அங்கு TTF வாசனின் நண்பர் ஒருவர் ஓடிச் சென்று அந்த அறையை திறப்பதை போல பிராங் செய்ய, அதனை உண்மை என நம்பி கீழே அமர்ந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் அவசரமாக எழுகின்றனர்.
ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் எனத் தெரிந்ததும், அந்த அறையில் இருந்தவர்களின் முகமே வாடிப் போகிறது. அதனை உணராமல் TTF வாசன் & கோ சிரித்து மகிழ்வது, பலரையும் கொதிப்படைய செய்துள்ளது. “உங்களுக்கு எல்லாம் காமடியா தெரியுதா? அங்க எவ்ளோ பேரு ரொம்ப நேரம் காத்திட்டு இருப்பாங்க. உனக்கு காசு இருக்குன்னு சுலபமா உள்ள போய்ட்டீங்க எல்லாம் திமிரு. அதுல ஒரு அம்மா கேட்டு திறக்குறாங்க எந்திரிங்கனு சொல்றாங்க. அடுத்த நிமிசமே ஏமாத்திட்டு போய்ட்ட, அப்ப அவங்களுக்கு எப்பிடி இருந்துருக்கும். இப்படி பண்ணிட்டு போனா ஏழுமலை இல்ல ஏழாயிரம் மலைய தாண்டி போனாளும் அருள் கிடைக்காது” என அந்த வீடியோவின் கீழேயே நெட்டிசன் ஒருவர் கமெண்ட்ஸ் போட்டுள்ளார்.
இதேபோல், பலரும் டிடிஎஃப் வாசனின் இந்த சேட்டைகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி மீண்டும் வாசனையும் அவரது நண்பர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவின் கீழேயே டிடிஎஃப் வாசனுக்கு அடுத்த கேஸ் கன்ஃபார்ம் என கமெண்ட்ஸ் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






