சென்னை: தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாடு வாரியத்தின் மூலம் சென்னை எழும்பூர் கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் வசித்த 114 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று குடியிருப்பு ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து சென்றபின், ‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.
தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் உடனடியாக தங்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வீடுகள் ஒதுக்கப்படாமல் இருக்கும் 218 குடும்பங்களுக்கும் வீடுகள் ஒதுக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் உறுதி அளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கல் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மக்களின் திடீர் மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’எழும்பூர், கண்ணப்பர் திடல் அருகே வசித்து வந்த வீடற்றோருக்கு அடுத்த மழை காலத்திற்குள் எல்லோருக்கும் வீடுகளை கட்டித் தருவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார். அதனை நிறைவேற்றுகிற வகையில், இன்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 114 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளை வழங்கியிருக்கிறார். இதன்மூலம், அவர்களுக்கு நிலையான முகவரியை அளித்திருக்கிறார்.
சென்னை மாநகரில் வீடற்றோரின் பல வருட கனவு நிறைவேறியதைப் போல, இந்த திட்டத்தை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.உதயநிதி ஸ்டாலின் முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.