தமிழ்நாடு

”மாநில அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்குக” கடுமையாக சாடிய இபிஎஸ்

மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

”மாநில அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்குக” கடுமையாக சாடிய இபிஎஸ்

மத்திய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ.2,000 கோடி நிறுத்தம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்து மாநில கல்விக்கொள்கைக்கான குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அண்மையில் வழங்கப்பட்டது. 

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்’ (Pradhan Mantri Schools For Rising India) என்ற திட்டத்தை உருவாக்கியது. கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தன்று, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில், ‘நாடெங்கும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகள் செய்யப்பட்டு புதியக் கல்விக்கொள்கையின் ஆய்வகங்களாக மாற்றப்படும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அரசு பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் ஆகும்.

இந்நிலையில், பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை ஏற்காததால் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் இருந்தது.

இதனையடுத்து சமீபத்தில் டெல்லிக்கு சென்று  பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியைஅளிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு நிதி வழங்காததன் எதிரொலி சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு சம்பளம் இல்லை. செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்காத தால் ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதற்கு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் தெரிவித்துள்ளதாவது, “ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. 

தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தை கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.

தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த மு.க.ஸ்டாலின் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க: ”துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வடிவேலு” உயர்நீதிமன்றத்தில் ஆதங்கத்தை கொட்டிய சிங்கமுத்து

எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.