யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.
கோலிவுட்டில் காமெடி கிங்காக வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் காமெடியை கண்டு சிரிக்காத ரசிக்காத ஆட்களே இல்லை. என்னதான் வடிவேலு சிறப்பாக காமெடி செய்தாலும் அவர் உடன் இருக்கும் காமெடி நடிகர்கள் தான் அவருக்கு பக்கபலமே. அந்த வகையில் வடிவேலுவின் காமெடிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் தான் சிங்கமுத்து. இவர்களின் ”என்ன வேணும் என்னதான் வேணும்”; ”தெரியாது தெரியாது தெரியாது”; ”இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியனும்” போன்ற வசங்கள் மிகவும் பிரபலமானது. வடிவேலு-சிங்கமுத்துவின் காம்போவில் பேசிய வசனங்கள் கிட்ட தட்ட மீம் மெட்டீரியலாகவே இருக்கும். இவர்கள் இருவரும் ஆரம்பகாலக்கட்டத்தில் நன்றாகவே பழகி வந்தனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் அவர்களை இருவரையும் சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சி எல்லாம் வீணாகியதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே எரியும் நெறுப்பில் எண்ணை ஊற்றுவது போல, நடிகர் வடிவேலு இல்லை என்றால் சிங்கமுத்து இல்லை என பலர் பேசத்தொடங்கினர். இதற்கு ‘அப்படி ஒரு நிலை எனக்கு ஒருபோதும் வராது’ என காட்டமாக பதிலளித்ததை நம்மில் பலர் பார்த்திருக்ககூடும்.
இவர்கள் நட்பில் விரிசல் விழும் விதமாக நிலத்தகராறு ஒன்று ஏற்பட்டது. தாம்பரத்தை அடுத்த படப்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 3 ஏக்கர் 52 செண்ட் நிலத்தை சிங்கமுத்து ஏமாற்றி வாங்கிவிட்டதாக நடிகர் வடிவேலு குற்றம்சாட்டி, வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக மீண்டும் ஒரு புதிய வழக்கை தொடர்ந்திருந்தார் நடிகர் வடிவேலு.பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கான பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் சிங்கமுத்து.
அதில், “மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்கை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ளார். தான் நடிப்பதை தடுக்கும் வகையில் தன்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை. வடிவேலுவை பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளார் சிங்கமுத்து.
மேலும் படிக்க: Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!
சிங்கமுத்து தரப்பில் விளக்கத்தை கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.