Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சென்னை மதுரவாயலில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, இந்து முன்னணி அமைப்பு சார்பாக, இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழா நடைபெற்றது. அதனையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான், இந்துக்களின் எழுச்சி நாள் என பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் குமரன் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், கோயில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல்துறையினர் அகற்றியிருக்க வேண்டும். சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு பதில், தனக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே மனுதாரர் அவ்வாறு பேசியுள்ளார். எனவே கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக கனல் கண்ணன் அவ்வாறு பேசியதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முக்கியமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கனல் கண்ணனுக்கு கடும் எச்சரிக்கையும் செய்திருந்தார். தந்தை பெரியாரின் சிலை மீது கை வைத்தால், சும்மா விட மாட்டேன் என்பதாக பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார். இதேபோல், திராவிட கட்சி தலைவர்களும் கனல் கண்ணனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன், 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஆக்ஷன் கோரியோகிராபி செய்துள்ளார் கனல் கண்ணன். அதேபோல் ஒருசில படங்களிலும் நடித்துள்ள கனல் கண்ணன், தற்போது இந்து முன்னணி அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?