கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் - சாதிப்பாரா கவுதம் கம்பீர்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

Jul 9, 2024 - 21:48
Jul 10, 2024 - 10:05
 0
கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் - சாதிப்பாரா கவுதம் கம்பீர்?
பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவுபெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

இதனையடுத்து, அவருக்குப் பிறகு, பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃபிளமிங், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், லக்னோ அணியின் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் பெயர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

மே 13 முதல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், மே 27ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, வீரேந்தர் சேவாக், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் பெயர்களில் பெயரில் போலியாக விண்ணப்பங்கள் குவிந்ததால் தேர்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பெயர் தொடர்ந்து அடிபட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் இந்த ஆண்டு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காகவே, அரசியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

அதே போல், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக செயல்பட்ட கவுதம் கம்பீர், கோப்பையையும் வென்று கொடுத்தார். முன்னதாக, கொல்கத்தா அணிக்கு 2 முறை கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்திருந்தார். இதனால், பிசிசிஐயின் பார்வை கவுதம் கம்பீர் மேல் விழுந்தது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சும் தொடர்ந்து எழுந்தது.

அதேபோல், இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோதும், முக்கிய தூணாக விளங்கியவர் கவுதம் கம்பீர் தான். அந்த உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்தவர்களில் கவுதம் கம்பீர் தான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள ஜெய் ஷா, “தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதையும், மாறிவருவதையும் கவுதம் கம்பீர் அருகில் இருந்து பார்த்துள்ளார். நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு, பல்வேறு வகையிலும் தனது பங்களிப்பை அவரது வாழ்க்கை முழுவதும் செலுத்தி வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல கவுதம் சிறந்த நபர் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், இளம் இந்திய வீரர்கள் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை கட்டமைப்பது கவுதம் கம்பீருக்கு சவாலாகவே அமையும். மேலும், ஒவ்வொரு வகையிலான போட்டிகளுக்கும் [டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள்] தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இவற்றையெல்லாம், கவுதம் கம்பீர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow