'இந்த முறை எங்களை வீழ்த்த முடியாது'.. இந்தியாவுக்கு பேட் கம்மின்ஸ் சவால்!

''பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை நான் இதுவரை வென்றதில்லை. ஆனால் நாங்கள் நல்ல நிலையில் உள்ளதால் இந்திய தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Aug 19, 2024 - 11:15
Aug 19, 2024 - 11:16
 0
'இந்த முறை எங்களை வீழ்த்த முடியாது'.. இந்தியாவுக்கு பேட் கம்மின்ஸ் சவால்!
Pat Cummins

சிட்னி: வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி ( Border Gavaskar Trophy) என அழைக்கப்படும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதியும், 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதியும், 4வது டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதியும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதியும் தொடங்குகிறது.

1992ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. கடந்த 2018-19 ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்த முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு எதிரான தொடரை விளையாடுவதற்கு முன்பு, இந்திய வீரர்களுக்கு சவால் விடும் செயலை ஆஸ்திரேலிய வீரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள பேட் கம்மின்ஸ், ''ஒவ்வொருக்கும் ஓய்வுக்கு பிறகு சிறு உற்சாகம் கிடைக்கும். அந்த வகையில் நான் கடந்த ஏழு முதல் எட்டு வாரங்கள் ஓய்வு எடுத்ததால் உற்சாகமாக உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் (ஆஸ்திரேலிய அணி) டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்திய அணிக்கு எதிராக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆகவே இந்திய அணியை பற்றி நன்கு தெரியும். இந்திய அணி பலம்வாய்ந்தது. பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை நான் இதுவரை வென்றதில்லை. ஆனால் நாங்கள் நல்ல நிலையில் உள்ளதால் இந்திய தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று கூறியுள்ளார்.

இந்திய தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட், ''இந்திய அணி அனைத்து வகையான கிரிக்கெட் பார்மட்டிலும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆனால் அதன்பிறகு பெரும் எழுச்சி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. ஆகவே இந்திய அணியை வீழ்த்துவது சுலபம் அல்ல. தரவரிசையில் முன்னணியில் உள்ள நாங்கள் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த விரும்புகிறோம்'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow