கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் – அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.

Mar 30, 2025 - 16:16
Mar 30, 2025 - 18:50
 0
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் – அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில் மூன்று மண்டலங்களில் வெற்றி பெற வேண்டும். மூன்று மண்டலங்களில் ஜெயிக்காமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்று அவர் கூறினார். தென் தமிழகத்தின் சூழல், மதுரை வட்டாரத் தொகுதிகள் மற்றும் கொங்கு பகுதி தொகுதிகளின் தனித்தன்மை குறித்து டெல்லியில் கட்சித் தலைமையுடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.ஆனால், டெல்லியில் என்ன பேசினேன் என்பதை வெளியிட்டால் தவறாகப் போய்விடும் என்று கூறி விவரங்களைத் தவிர்த்தார்.

தொண்டனாகப் பணியாற்றத் தயார்

ஜாதிகள் வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால், வாக்குச் செலுத்துவதில் ஜாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கட்சியின் தலைவராகவும், தொண்டனாகவும் மைக்ரோ லெவலில் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார். பாஜக மற்றும் தமிழக நலனே எனக்கு முக்கியம். தொண்டனாகப் பணியாற்றத் தயார் என்று டெல்லியில் தெரிவித்துள்ளேன் என்றார்.

Read more: வார விடுமுறை எதிரொலி.. உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கூட்டணி குறித்த கேள்விகளுக்கு, கூட்டணி பற்றி இப்போது பேச விரும்பவில்லை. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் உள்துறை அமைச்சர் பேசியதை இறுதிக் கருத்தாகக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தார். பிரதமர் மோடி ஏப்ரல் 6ஆம் தேதி ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும், அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழகப் பயணம் இதுவாகும் என்று தெரிவித்தார்.

எந்த உடன்பாடும் இல்லை

விஜய் மற்றும் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்தது குறித்து பேசிய அண்ணாமலை, மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். இதில் விருப்பு-வெறுப்பு பார்ப்பதில்லை. விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். 

செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்கள் எழுதப்படுகின்றன. பாஜகவுக்கு யாரையும் மறைமுகமாகச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். ஒரு மாநில எதிர்க்கட்சித் தலைவர் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதில் தவறில்லை என்று கூறிய அவர், அதிமுக தலைமை மாற்றம் குறித்த கேள்விக்கு, அதிமுகவின் உள்ளகப் பிரச்சினைகளில் பாஜக தலையிடாது. எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்று பதிலளித்தார்.

தலைமை சரியான முடிவு எடுக்கும்

பாஜகவில் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும், விஜய் தன் கட்சியில் வேட்பாளர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர். ஆனால், பாஜக யாரையும் முதல்வராக முன்மொழிவதில்லை. இருப்பினும், தமிழகத்தில் எங்கள் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்தார். என்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாஜகவின் வளர்ச்சியே எனக்கு முதன்மையானது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Read more: 'விக்ரம்-63' படத்தின் பெயர் இதுவா?-வெளியான புதிய தகவல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று கூறிய அண்ணாமலை, கட்சியின் முடிவுகள் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும், என்று தெரிவித்தார். NCRB புள்ளிவிவரங்கள் குறித்த கேள்விக்கு, மாநில அரசு தரவு கொடுத்தால்தான் அது வெளியாகும் என்று பதிலளித்தார். வருங்காலத்தில் என்னைப் பார்ப்பீர்கள். எதையும் மாற்றிப் பேசுபவன் நான் அல்ல என்று கூறிய அண்ணாமலை, தனது நிலையில் உறுதியாக இருப்பதாகவும், பாஜகவின் தலைமை சரியான முடிவுகளை எடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow