அரசியல்

கருணாநிதி, ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயரா?- திருமாவளவனுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

"முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் திருமாவளவனுக்கு இருக்கிறதா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதி, ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயரா?- திருமாவளவனுக்கு டிடிவி தினகரன் கேள்வி!
TTV Dhinakaran and Thirumavalavan
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், சோழ மன்னர்கள் குறித்தும் அவர்களது பெயர்கள் குறித்தும் விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்குத் தமிழக அரசியல் களத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிடிவி தினகரன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? திருமாவளவன்

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள்; பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள்.

அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை; உடன்பாடும் இல்லை" என்று பேசியிருந்தார்.

திருமாவளவனுக்கு கண்டனம்

இந்த நிலையில், திருமாவளவன் கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

"அரைவேக்காட்டுத்தனமான பேச்சு"

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திருமாவளவனின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

கருணாநிதி, ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?

ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவன், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.