அரசியல்

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்- தவெக மனு!

அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்- தவெக மனு!
TVK
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட இந்த அரசாணை, வளர்ந்து வரும் கட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதாகத் தவெக குற்றம் சாட்டியுள்ளது.

நெறிமுறைகளுக்கான பின்னணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரோடு ஷோக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த ஜனவரி 5-ம் தேதி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அரசாணையாக வெளியிட்டது.

தவெக-வின் முக்கிய ஆட்சேபனைகள்

தமிழக அரசின் இந்த நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி, தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ளார். அதில், "ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோரும்போது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இது பதிவு செய்யப்பட்டு இன்னும் அங்கீகாரம் பெறாத புதிய கட்சிகளைப் பாதிக்கும்.

வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள பல நிபந்தனைகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வகையில் உள்ளன. இதனால் கட்சித் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவே முடியாத சூழல் ஏற்படும். சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க வேண்டிய அரசின் பொறுப்புகளை, அரசியல் கட்சிகள் மீது திணிக்கும் வகையில் இந்த விதிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளை வகுக்கும் முன் தவெக அளித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கவில்லை.

புதிய நெறிமுறைகளுக்குக் கோரிக்கை

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தவெக கோரியுள்ளது. அதற்குப் பதிலாக, அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, பாகுபாடற்ற முறையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.