புற்றடி மாரியம்மன் தீமிதி திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவாரூர் மாவட்டம் தகரவெளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒரு வார காலம் சிறப்பு பூஜைகள், தினம் தோறும் சுவாமி வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி பாடை காவடி எடுத்தும், பால்குடங்கள், முடி இறக்குதல் உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆலயம் எதிரே வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் பால்குடங்களுடனும், கை குழந்தைகளுடனும் தீயில் இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர் அனைவரையும் பாதுகாக்கும் விதமாக 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.
மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் உதவி மற்றும் 15-க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். நிகழ்வில் திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், காவல் ஆய்வாளர் மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






