இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஷிஹான் ஹுசைனி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தில் அவருக்கு கராத்தே பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து அசத்தியிருப்பார். கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் வில் வித்தை வீரராகவும் திகழ்ந்தார்.மேலும், 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த புற்றுநோய்
இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், நான் இறந்த பிறகு தன் உடலை தானம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
ரத்த புற்று நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷிஹான் ஹுசைனி இன்று (மார்ச் 25) அதிகாலை 1:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சென்னை, பெசன்ட் நகர், TAAT தலைமையகத்தில் மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.