செங்கோட்டையனுக்கு Y + பாதுகாப்பு - மத்திய அரசு பரிசீலனை !
செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்றிரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம் என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சென்றுள்ளார். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் செங்கோட்டையனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






