மைக் டைசனை வீழ்த்திய யூடியூபர் ஜேக்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!
20 ஆண்டுகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை, யூடியூப்பர் ஜேக்பால் வீழ்த்தினார்
முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன் (58), யூடியூபர் ஜேக்பால் (27) மோதும் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கும், இந்திய நேரப்படி, இன்று காலை 6.30 மணிக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி 50 போட்டியில் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபரான ஜேக்பால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். அவர் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில், 10-ல் வெற்றி பெற்ற நிலையில், அதில் 7 போட்டிகளில் முறை ‘நாக்-அவுட்’ வெற்றி பெற்றுள்ளார்.
தொழில்முறை போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் 58 வயதான மைக் டைசனை, 27 வயதான யூடியூபரும், குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் எதிர்கொண்டார். சுமார் 20 ஆண்டுக்கு பிறகு, மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பிய மைக் டைசன் அறிமுக போட்டியில் ஜேக்பாலை கன்னத்தில் அறைந்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், நிச்சயம் இதற்கு ரிங்கில் பதிலடி கொடுப்பேன் என ஜேக் பால் சூளுரைத்துள்ளார். அவர் சொன்னது போலவே முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.
8 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், ஜேக் 28 சதவீத புள்ளிகளும், டைசன் 18 சதவீத புள்ளிகளும் பெற்றிருந்தனர். மைக் டைசனின் தாகுதலில் இருந்து முதலில் தற்காத்துக்கொண்ட ஜேக் பால் பின்னர், அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
உலக அளவில் இந்த குத்துச்சண்டைப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் போட்டியைக்காண காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த போட்டியில் மைக் டைசன் தோல்வியை தழுவினாலும், ரசிகர்கள் மத்தியில் என்றுமே ஹீரோவாக திகழ்வார் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி பெற்ற ஜேக்பாலுக்கு இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய் பரிசுப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?