சென்னையில் டமால் டுமீல்.. இடி மின்னலுடன் 1 மணி நேரத்தில் கொட்டிய கனமழை... செம சம்பவம்

சென்னை: இரவு நேரத்தில் இடி மின்னலோடு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பிரதான சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. திடீர் மழையால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Jul 4, 2024 - 06:39
Jul 4, 2024 - 10:10
 0
சென்னையில் டமால் டுமீல்.. இடி மின்னலுடன் 1 மணி நேரத்தில் கொட்டிய கனமழை... செம சம்பவம்
Chennai Rainfall July Month Report

தமிழக தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தினசரி பெய்து வரும் மழையால் அணைகள் நிரம்பத்தொடங்கியுள்ளன. குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொண்டுகிறது. சீசன் களைகட்டியுள்ளது. மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பருவமழையின் தீவிரத்தால் நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

சென்னையில் பகல் நேரங்களில் சுள்ளென வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென மழை பெய்கிறது. நேற்றைய தினம் ( ஜூலை 3) சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியல் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் மாலை நேரத்தில் வெப்பம் படிப்படியாக தணிந்து குளிர் காற்று வீசியது. 

இரவு 9 மணிக்கு மேல் இடி மின்னலோடு மழை வெளுத்து வாங்கியது. பபல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.  கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு பூந்தமல்லி, ஆவடி, பட்டாபிராம்  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. 

மயிலாப்பூர், மந்தைவெளி,  சைதாப்பேட்டை,வள்ளூவர்கோட்டம்  கிண்டி ஈக்காடுதாங்கல்  உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் இடை விடாது பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நுங்கம்பாக்கத்தில் அரை மணி நேரத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இரவு தனது முகநூல் பதிவில், இன்று மிஸ்ஸே ஆகாது. டமால் டுமீல் என ஜூலைக்கான மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு பகுதியில் பெய்யும். 38 டிகிரி அளவிற்கு இன்று வெப்பநிலை இருந்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறியிருந்தார்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் வரை உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இடிமின்னலுடன்மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் விரைவில் நல்ல மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தார்.

மழை பெய்து முடித்த உடன் பிரதீப் ஜான் தனது மற்றொரு பதிவில், சிவப்பு தக்காளி (மிகவும் உக்கிரமான மேகங்கள்) தென் சென்னை புறநகர் பகுதிகளில் காணப்படுகின்றன. ரோஹித் சர்மா உலக கோப்பை டி20 போட்டியில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அளவிற்கு இன்று நுங்கம்பாக்கத்தில் சாதனை படைத்துள்ளது மழை. நுங்கம்பாக்கத்தில் வெறும் 30 நிமிடங்களுக்குள் 50 மிமீ மழை பெய்துள்ளது. இங்கேயே இப்படி என்றால், சிவப்பு தக்காளி உள்ள தென்சென்னையில் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow