பெண் காவலர்களுக்கு குட் நியூஸ்... பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் போலீஸாருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

Aug 23, 2024 - 19:37
Aug 24, 2024 - 10:02
 0
பெண் காவலர்களுக்கு குட் நியூஸ்... பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர்

சென்னை: காவல்துறையில் மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள் என்ற பிரிவின் கீழ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார், அவருக்கு போலீஸார் சார்பில் மிடுக்கான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

அதேபோல், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியதும் காவலர்களுக்கு, வீர தீர செயலுக்கான பதக்கம், குடியரசு தலைவருக்கான பதக்கம், மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பதக்கம், மாநில அரசின் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கம், அண்ணா பதக்கம், சிறந்த புலனாய்வு பதக்கம், காந்தியடிகள் பதக்கம், கைரேகை பிரிவு சிறந்த பணிக்கான முதலமைச்சர் பதக்கம், காவல்துறையில் சிறந்த செயலாக்கம் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், என் துறையைச் சார்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்றதை பார்க்கும் போது, நான் வாங்கியபோது போல மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பதக்கங்களுக்குப் பின் இருக்கக் கூடிய காவலர்களின் உழைப்பும் திறமையும் தலை வணங்கத்தக்க அம்சமாகும் என பேசினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். அமைதியான மாநிலத்தில் தான் வளமும் வளர்ச்சியும் இருக்கும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தொழில், கல்வி, மனிதவள மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்றார்.  

அதேபோல், பெண் காவலர்கள் மகப்பேறு முடித்துவிட்டு பணிக்கு திரும்பும்போது, அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு கணவர் அல்லது அவர்களது குடும்பத்தினர் இருக்கக்கூடிய பகுதிக்கு பணி வழங்க உத்தரவிட்டுள்தாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். எல்லாத் துறைகளும் நல்ல துறை தான், ஆனால் காவல்துறை தான் இதில் அதிக உரிமை கொண்டாட முடியும் எனக் கூறிய அவர், தமிழ்நாடு சிறப்பாக செயல்பட காவல்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மற்றவர்களும் இந்தப் பதக்கங்கள் பெற வேண்டும், சட்ட ஒழுங்கு பணியில் அர்பணிப்போடு செயல்படுபவர்களை பாராட்டுகிறேன். உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்தால் பதக்கமும் பாராட்டும் உங்களைத் தேடிவரும் எனக் கூறினார்.

மேலும், காவல்துறையை நவீனப்படுத்த கலைஞர் தான் முதலில் காவல் ஆணையம் அமைத்தார். அதில், மகளிரை இடம்பெற செய்ததும் கலைஞர் தான். இன்றைய நிகழ்ச்சியில் பெண் டிஎஸ்பி எனக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow