திருநெல்வேலி மேயர் சரவணன் ராஜினாமா..பின்னணி காரணம் என்ன?

மேலிட அழுத்தத்தை தொடர்ந்து திருநெல்வேலி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக சென்னையில் இருந்து மின்னஞ்சல் வழியாக தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அனுப்பி உள்ளார். அமைச்சர் கே என் நேரு இதுகுறித்து விசாரிக்க உள்ளதாக தகவல்

Jul 3, 2024 - 18:29
Jul 4, 2024 - 10:09
 0
திருநெல்வேலி மேயர் சரவணன் ராஜினாமா..பின்னணி காரணம் என்ன?
Tirunelveli mayor Saravanan resignation

நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை திமுகவின் சரவணன் ராஜினாமா செய்தார். கவுன்சிலர்களுடன் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவியிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதலே நெல்லை மாநகராட்சி மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஜனவரி மாதம் எச்சரித்திருந்தார். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்கிற ரீதியில் சரவணனின் மேயர் பதவி இருந்து வந்தது. 

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி 12அம் தேதி நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நெல்லை தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை திமுக முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார். இந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர். அப்போது திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது கட்சி தலைமையின் உத்தரவை மீறுவது ஆகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவுறுத்தலின் பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் சுற்றுலா சென்றதை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. 

கடந்த 6 மாத காலமாக மேயர் பதவியில் இருந்த சரவணன் இன்றைய தினம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலிட அழுத்தத்தை தொடர்ந்து திருநெல்வேலி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக சென்னையில் இருந்து மின்னஞ்சல் வழியாக தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அனுப்பி உள்ளார். அமைச்சர் கே என் நேரு இதுகுறித்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், திருநெல்வேலி திமுக மேயரும் தனது பதிவியை ராஜினாமா செய்திருப்பது திமுக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow