சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா..தாம்பரம் ஸ்டேசனில் 3 நாட்களுக்கு ரயில்கள் நிற்காது

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 10, 2024 - 13:41
 0
சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா..தாம்பரம் ஸ்டேசனில் 3 நாட்களுக்கு ரயில்கள் நிற்காது
thambaram train service

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் மூன்று நாள்கள் அங்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் ஏற்கனவே இருக்கும் சிலிப்பர் கற்கள் அகற்றப்பட்டு புதிய கற்கள் அமைப்பது, ஜல்லி கற்கள் போடப்பட்டு வருகின்றன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. 29 விரைவு ரயில்களின் சேவையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில விரைவு ரயில்களின் சேவையில் ஆகஸ்ட்17ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேஸ்வரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய விரைவு ரயில்கள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதேபோல், வெளியூர்களில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்தடையும் கொல்லம் (16102), சேலம் (22154), தஞ்சாவூர் உழவன் (16866), நாகர்கோவில் (22658), செங்கோட்டை (20682), காரைக்கால் (16176), மதுரை (22624), முத்துநகர் (12694), குருவாயூர் (16128), மதுரை தேஜஸ் ஆகிய விரைவு ரயில்களும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

எனினும், பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட அனைத்து விரைவு ரயில்களும் ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகளில் செங்கல்பட்டில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow