அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை.. அசோக்நகர், சைதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்

ஆசிரியரை அவமானப்படுத்திய பேச்சாளர் மகா விஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்த நிலையில் அசோக்நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Sep 6, 2024 - 12:16
Sep 7, 2024 - 10:09
 0
அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை.. அசோக்நகர், சைதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்
ashok nagar girls school head master transfer to tiruvallur

சென்னையில் அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அசோக் நகர் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும். மகாவிஷ்ணுவை நான் சந்தித்ததற்கும், இந்நிகழ்ச்சிக்கும் தொடர்பு கிடையாது. மாநில பாடத்திட்டம், அரசு பள்ளிகளை தவறாக பேசுவதை நான் கண்டிக்கிறேன். ஆசிரியரை அவமானப்படுத்திய பேச்சாளர் மகா விஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபத்தோடு கூறினார்.

“பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என ஆசியர்களுக்கு தெரிய வேண்டும். ஆசியர்களுக்கு குறைந்த பட்ச புரிதல் வேண்டும். இதை வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் சொல்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பிற்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யாராவது கூறினால் அதை எதிர்த்து கேள்வி கேட்கப்படும். நல்ல மதிப்பெண் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை. பகுத்தறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என்றும் கூறினார்.

மகாவிஷ்ணு , அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில்,  இது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலையிலேயே விசாரணையை துவக்கினார். சம்பவம் நடைபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழரசி மற்றும் இருவரிடமும் இது தொடர்பாக நடந்தது என்ன என்பதை இயக்குனர் கண்ணப்பன் கேட்டு அறிந்தார் அதோடு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்சிடமும் விசாரணை நடத்தினார்.

சர்ச்சைக்குரிய ஒரு நபரை அவரின் பின்னணி குறித்து விசாரிக்காமல் அனுமதி அளித்தது எப்படி என அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் இயக்குனர் கேள்வி எழுப்பினார்.இதனிடையே அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் கோவில்பதாகை பள்ளிக்கு காலையில் தமிழரசிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் பிற்பகலில் அவர் கோயில் பதாகை பள்ளியில் இருந்து பணியிடமாறுதல் செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.ஒரே நாளில் இரண்டாவது முறையாக தலைமை ஆசிரியைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது

இதே போல ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow