சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் கங்குவா படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்ததை அடுத்து, விரைவில் ப்ரோமோஷன் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸுக்கு ரெடியானது. இதுகுறித்து லைகா தயாரிப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் வெளியானது. இதனால் அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையனும் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் மோதும் சூழல் உருவானது. வேட்டையனை விடவும் கங்குவா படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், பாக்ஸ் ஆபிஸில் கங்குவாவுக்கு சேதாரம் ஏற்படும் என சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கார்த்தியின் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, கங்குவா ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகக் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து வளர்ந்தவன் நான், தமிழ் சினிமாவில் அவர் தான் மூத்தவர். அதனால் அந்த மூத்தவருக்கு வழிவிடும் விதமாக கங்குவா ரிலீஸ் தேதியை மாற்றவுள்ளதாகவும், புதிய வெளியீட்டு தேதியை சீக்கிரமே அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி எப்போது என சூர்யா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அதன்படி, சூர்யாவின் கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 30ம் தேதி தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியாகிறது. அதேபோல் ஜெயம் ரவியின் பிரதர்ஸ், கவின் நடித்துள்ள பிளடி பெங்கர்ஸ் படங்களும் தீபாவளி ரேஸை உறுதிசெய்து விட்டன. இப்போது சூர்யாவின் கங்குவா படமும் தீபாவளி ரிலீஸில் களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை கங்குவா தீபாவளிக்கு ரிலீஸானால், பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என்பது கன்ஃபார்ம்.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்
ஆனால், தீபாவளி பாக்ஸ் ரேஸில் பிரச்சினை வேண்டாம் என கங்குவா டீம் முடிவு செய்துள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட்டுக்கு சிங்கிளாக ரிலீஸானால் தான் கலெக்ஷனில் தாக்குப் பிடிக்க முடியும் என படக்குழு பிளான் செய்துள்ளது. இதனால் நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதன் காரணமாக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.