அரசு பள்ளியில் ஆன்மீக போதனை..அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த திமுகவினர்.. முதல்வர் சொன்ன பதில்

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 6, 2024 - 10:12
Sep 7, 2024 - 10:12
 0
அரசு பள்ளியில் ஆன்மீக போதனை..அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த திமுகவினர்.. முதல்வர் சொன்ன பதில்
mk stalin tweet

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய  வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.அந்த நிகழ்ச்சியில், பேசிய மகாவிஷ்ணு பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருந்தார்.

ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் பேசியது பள்ளியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 விஷ்ணு பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டார்.இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என்று யார் சொன்னது? எந்த சட்டம் சொல்கிறது?  பாவ புண்ணியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால் நிறைய பாவம் செய்வான்.. நீங்க சொல்லிக் கொடுப்பீங்களா பாவ புண்ணியத்தை பற்றி” என்றும் அந்த சொற்பொழிவாளர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையானது. 

இதனையடுத்து விவகாரத்தில் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். அரசு அனுமதி இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுகவினரே ஹேஸ்டேக் பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய  வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow