'முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள்'.. பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் அட்வைஸ்!
MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
MP Dayanidhi Maran : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது, புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பை பெற்றன.
அதே வேளையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் ஒருமுறை கூட உச்சரிக்கப்படவில்லை.
இது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி, சீமான், வைகோ, திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல் பாஜகவை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின், ''பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டது மத்திய அரசு செய்த துரோகம். நமது தமிழ்நாடு அவர்களின் சிந்தனையிலேயே இல்லை'' என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டிக்கும்விதமாக வரும் 27ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்ற மக்களவையில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய தயாநிதி மாறன், ''மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார்.
பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி தனது கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மற்ற மாநிலங்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட பட்ஜெட்டில் பிரதமர் எந்த திட்டங்களும் அறிவிக்கவில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'வாக்களித்த மக்கள் மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்ந்து பாடுபடுவேன்' என்று அடிக்கடி கூறுவார். ஆகவே பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்ற வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதேபோல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தயாநிதி மாறன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.
What's Your Reaction?