இது ஒரு தொடர்கதை... டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Jul 9, 2024 - 20:59
Jul 9, 2024 - 21:01
 0
இது ஒரு தொடர்கதை... டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
Illicit Liquor in Villupuram

விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 6 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அம்மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார்.

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதற்கு திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்திருப்பதாகவும், இந்த மரணங்களுக்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம்  மாவட்டத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி வந்து பலர் குடித்து வருகின்றனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துள்ளார். 

இன்று காலை சாராயத்தை குடித்த சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், காளிங்கராஜ், சுரேஷ்பாபு, ராஜா, பிரகாஷ், பிரபு உள்ளிட்ட 6 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் விஷச் சாராயம் குடித்து 6 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாராயம் குடித்து பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கள்ளச்சாராயம் குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow