ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை

ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

Aug 20, 2024 - 12:38
Aug 20, 2024 - 12:39
 0
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை

2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் (Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து இருப்பதாலும், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம் உட்பட மொத்தம் ஏழு பேரை மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜாஃபர் சாதிக்கின் சகோதரர் சலீமையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக இவ்வழக்கில் போதைப்பொருள் விற்பனை மூலமாக கிடைத்த சட்டவிரோத பணத்தை பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தி இருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்த நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் வங்கி கணக்கில் விழுந்த பணம் குறித்தான தகவல்களை விசாரிக்க, சலீமை ஏழு நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம் உள்பட 10 பேரை எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு 38 கிலோ கேட்டமைன் போதை பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக், சலீம், பெரோஸ் கான், நூர் உள்ளிட்ட பல பேர் மீது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் சலீம் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி இதையும் எஃப்.ஐ.ஆரில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு கடத்த முயற்சித்த வழக்கையும் சேர்த்துள்ளனர். இதனால் அமலாக்கத்துறை விசாரணை பிடியை இறுக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow