சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சின்னத்திரை சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Aug 10, 2024 - 13:19
 0
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
tv actress chitra death case

தமிழில் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபலமான சின்னத்திரை நடிகையாக உலா வந்தவர் சித்ரா.மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா,சன்டிவியில் ஒளிபரப்பான சின்னப்பாப்பா, பெரிய பாப்பா டிவி சீரியலில் நடித்தார். அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9ஆம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர்15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவல்துறையினர் சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது.


இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. ஆனால், விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். 2021-ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருந்து வருகிறது.

வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே உள்ளனர். எனவே, வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் , "வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


இந்த நிலையில் சித்ரா மரண வழக்கு விசாரணையில் வாத விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow